
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
செய்தி முன்னோட்டம்
திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், திருமணத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணின் வேலையை நிறுத்துவது பாலின பாகுபாடாகும். பாலின சார்பு அடிப்படையிலான எந்தவொரு சட்டத்தையும் அரசியலமைப்பு அனுமதிக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
1988 ஆம் ஆண்டு திருமணம் ஆனவுடன் பணியில் இருந்து நீக்கப்பட்ட செலினா ஜானின் கோரிக்கையின் பேரில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட செலினா ஜான், லெப்டினன்ட் பதவியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இராணுவம்
திருமணமான இராணுவ செவிலியர்களை சேவையில் இருந்து நீக்கும் சட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2012 இல் அவர் ஆயுதப்படை தீர்ப்பாயத்தை அணுகினார்.
அந்த தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது.
ஆனால், 2019 இல், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
பிப்ரவரி 14ஆம் தேதி இதற்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தலையிட அவசியமில்லை என்றும், அது வழங்கிய தீர்ப்பு சரிதான் என்றும் கூறியது.
திருமணமான இராணுவ செவிலியர்களை சேவையில் இருந்து நீக்க 1977 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால், அந்த சட்டம் 1995-ல் திரும்பபெறப்பட்டது என்றும், அது தற்போது நடைமுறையில் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.