ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி
டெல்லியின் பரபரப்பான போக்குவரத்து சந்திப்பில் உள்ள ஒரு தடுப்பணையின் வடிகால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்ததால், வெள்ள நீர் தேசிய தலைநகரின் பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து, டெல்லியில் ஏற்பட்டிருக்கிருக்கும் இந்த வெள்ள நெருக்கடியை தீர்க்க இந்திய ராணுவமும் கடற்படையும் போராடி வருகின்றன. ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு யமுனை நதியின் நீர்மட்டம் அபாயக் கட்டத்திற்கு மேல் உயர்ந்ததால், இந்திய ராணுவத்தின் உதவியை டெல்லி நிர்வாகம் கோரியது. அதன்பிறகு, ராணுவத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து டெல்லி தலைமைச் செயலாளரும் ராணுவ அதிகாரிகளும் விவாதித்தனர். ஐடிஓ தடுப்பணையின் அடைப்புக் கதவுகளைத் திறக்க இந்திய கடற்படை தங்களுக்கு உதவி வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.
வீடுகளை இழந்து உணவு, உடை இல்லாமல் தவிக்கும் டெல்லி மக்கள்
ஐடிஓ தடுப்பணையில் உள்ள 32 மதகுகளில் ஐந்து மதகுகள் சேதமடைந்துள்ளன. ஏறக்குறைய 20 மணிநேர இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு, தடுப்பணையின் ஒரே ஒரு மதகு நேற்று இரவு திறக்கப்பட்டது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய இந்திய ராணுவமும் கடற்படையும் போராடி வருகின்றன. இதற்கிடையில், யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான டெல்லி வாசிகளின் வீடுகளும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடுமையான உணவு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் கூடாரங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. இருப்பினும், பலருக்கு இன்னும் உதவி தேவைப்படுகிறது. டெல்லியின் தெருக்களில், வீடுகளை இழந்த குடும்பங்கள் தண்ணீர் முதல் உணவு வரை அனைத்திற்கும் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.