மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது
மணிப்பூரில் பல நாட்களாக வன்முறை எதுவும் இல்லாமல் அமைதி நிலவி வந்த நிலையில், இன்று(மே 22) மதியம் மீண்டும் அங்கு புதிய மோதல்கள் பதிவாகி உள்ளன. இதனையடுத்து, மணிப்பூரில் இராணுவ வீரர்களும் துணை ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத் தலைநகர் இம்பாலின் நியூ செக்கன் பகுதியில் மெய்த்தே மற்றும் குக்கி சமூகங்கள் மோதிக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் ஏதோ இடத்திற்காக மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதல்களின் போது, அப்பகுதியில் தீ வைக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூரில் ஒரு மாதத்திற்கும் மேலாக இன மோதல்களும் வன்முறைகளும் பதிவாகி கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி
மே 3ஆம் தேதி, மணிப்பூரில் சுமார் 30 பழங்குடியின குழுக்களுக்கும், பழங்குடியினரல்லாத மெய்த்தே இனத்தவருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. ஒரு வாரம் நீடித்த இந்த வன்முறையால் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு ஏற்பாடு செய்த முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று கூறி இந்த வன்முறை போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுபான்மை மலைவாழ் சமூகத் தலைவர்கள், மெய்தே சமூகம் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது நியாயமற்றது என்றும் கூறி இருந்தனர்.