கட்சியால் வேறுபட்டிருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றுபட்ட எதிரிகள்? ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்
சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழக்கில் தினசரி பல திருப்பங்களும், கைதுகளும் நடைபெற்று வருகிறது. இந்த கொலை ஒரு பழிக்குப்பழி வாங்கும் கொலை தான் என காவல்துறையினர் தெரிவித்து வந்தாலும், இந்த வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதைப்பார்க்கும் போது, இந்த பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கை அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளதென்பதை காட்டுகிறது. அதோடு இதில் ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டும் சம்மந்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கைதானவர்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கட்சி நிர்வாகம் நீக்கி வருவது இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்கு என்பதை உறுதி செய்கிறது.
யாரெல்லாம் சந்தேகத்தின் பிடியில் இருப்பது?
ஆரம்பகட்டத்தில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை என கருதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக பெண் வழக்கறிஞர்கள் மலர்கொடி ஹரிஹரன் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு, வடசென்னை பா.ஜ.க. பெண் பிரமுகர் அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்ம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததாகவும், இவர்கள் கூட்டு சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.