ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
உத்தர பிரதேசம்: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் மேலும் 10 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், ஐந்து இந்துப் பெண்கள் தங்களுக்கும் ஞானவாபி மசூதியில் வழிபடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து கால தாமதம் செய்து வரும் தொல்லியல் துறை
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மசூதியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ASIக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த எதிர்ப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை ஞானவாபி மசூதியில் தனது ஆய்வை தொடங்கியது. ஆனால், ஆய்வு முடிந்த பிறகும், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால தாமதம் செய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஞானவாபி மசூதியின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க, மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் ASI கோரி இருந்தது. இந்நிலையில், 21 நாட்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்த நீதிமன்றம், மேலும் 10 நாட்களுக்கு மட்டும் நீட்டித்துள்ளது.