வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்ட அவலம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய மாணவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. அரக்கோணத்தினை அடுத்த காலிவாரி கண்டிகை என்னும் பகுதியினை சேர்ந்தவர் தீபன், இவருக்கு வயது 18. சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இவருடைய தந்தை மரணமடைந்த நிலையில், தீபனின் மூத்த சகோதரர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு சென்ற தீபன், இரவு பகல் பார்க்காமல் வீட்டில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முதலில் அவரது விரல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்
அதன் பிறகு அவரது மனநலம் பாதிக்கப்பட்டு, வித்தியாசமாக அவரது நடவடிக்கை மாறியுள்ளது. இதனை கண்ட அவரது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீபனை, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் இணைந்து நேற்று(அக்.,3) அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அவர் மேலும் பாதிப்பிற்குட்படாமல் தடுக்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கை, கால்களை கட்டி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து வீடியோ கேமில் கவனம் செலுத்தி விளையாடியதால் அவரது நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.