தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது
சென்னையில் மக்கள் விடிய விடிய பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடியதால் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 170 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு, தற்போது சென்னையின் பல இடங்களில் 200 கடந்து 'மோசமான' நிலையில் உள்ளது. மேலும், அதிகபட்சமாக மணலியில் 316, வேளச்சேரியில் 301 ஆகவும் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்து, 'மிகவும் மோசமான' வகைக்கு சரிந்துள்ளது. பட்டாசு வெடிக்க காலை 6-7 மணி வரையிலும், இரவு 7-8 வரையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு முன்னர் கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் காற்றின் தரக்குறியீடு 83 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததால் வழக்கு பதிவு
சென்னையில் தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்த குற்றத்திற்காக, 118 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக பெருநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பட்டாசு குப்பைகளை அகற்றுவதற்காக 20,000 தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பணியமத்தப்பட்டுள்ளனர். குப்பைகளை அகற்ற மண்டலத்துக்கு இரண்டு வாகனங்கள் என, முப்பது வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அழிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளிலும், காற்று மாசு மிகவும் மோசமான நிலைக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.