தொடரும் மாணவர் தற்கொலைகள்: கோட்டாவில் நுழைவு தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை
ராஜஸ்தானின் கோட்டாவில், JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த 18 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக திங்கள்கிழமை போலீஸார் தெரிவித்தனர். இந்த மாதத்தில் மட்டுமே, இத்தகைய பயிற்சி மையத்தில் பதிவான இரண்டாவது தற்கொலை வழக்கு இது. காவல்துறையின் கூற்றுப்படி, இறந்துபோன அந்த மாணவி போர்கெடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்தில் தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்டுள்ள தற்கொலை கடிதத்தில், நிஹாரி சிங் என்ற அந்த மாணவி,"அம்மா, அப்பா, என்னால் ஜேஇஇ படிக்க முடியாது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் மோசமான மகள்" என்று ஹிந்தியில் எழுதியுள்ளார்.
கோட்டா மாநிலத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்
கடந்த வாரம் 18 வயது நீட் மாணவர் முகமது ஜெய்த் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர். கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான அகில இந்தியத் தேர்வான நீட் தேர்வில் தனது இரண்டாவது முயற்சிக்குத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக கோட்டாவில் 30 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கோட்டா மாவட்டம், நீட், JEE உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது. தங்கள் பெயரை காப்பாற்ற பயிற்சி மையங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மாணவர்களை மனஅழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. இதனால், தற்போது கோட்டா எதிர்மறை பிரபலத்தை அடைந்து வருகிறது.