
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகுகிறாரா? அடுத்த தலைவர் யார்?
செய்தி முன்னோட்டம்
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.
தமிழகத்தில் பாஜக தனது கால்தடத்தை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், சாதி சமன்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் அதிமுக மற்றும் பாஜக உடைவதற்கு அண்ணாமலை முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மாற்றம்
தலைமை மாற்றத்திற்கு காரணம் சமூகமா?
கூட்டணியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் பிரதான முகங்களாக இருப்பதை பாஜக விரும்பவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் மேற்கு கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இந்த மாற்றத்தை மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அண்ணாமலை நடத்திய சந்திப்பில் பாஜகவின் முடிவு குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாற்று பதவி
தேசிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்
"டெல்லி அவருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் காண்கிறது" என்று அண்ணாமலையிடம் கூறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
"அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறினாலும் இல்லாவிட்டாலும், அவர் தமிழ்நாட்டிற்கான கட்சியின் நீண்டகால உத்தியில் ஒரு முக்கிய நபராக இருக்கிறார். அவர் ஒரு தேசியப் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறாரா அல்லது மாநிலத்தில் வேறு ஒரு பணியை ஏற்றுக்கொள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்," என்று பாஜக தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
மாற்று
அண்ணாமலைக்குப் பதிலாக யார் வருவார்கள்?
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலைக்கு பதிலாக திருநெல்வேலியைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவரான நைனார் நாகேந்திரன் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு 2 வாரங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
நைனார் நாகேந்திரன் முன்பு அதிமுகவில் இருந்தவர். அதனால் கூட்டணி கட்சியின் பேச்சுவார்த்தைக்கு உதவக்கூடும் எனவும் கட்சி தலைமையகம் நம்புகிறது.
"பாஜக மேற்கு தமிழ்நாட்டிற்கு அப்பால் தனது பிடியை பலப்படுத்த விரும்புகிறது. நாகேந்திரன் போன்ற ஒரு தலைவரை கொண்டு வருவது தென் மாவட்டங்களிலும் அதற்கு அப்பாலும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்த உதவும்" என்று மற்றொரு தலைவர் கூறினார்.
அண்ணாமலை
அண்ணாமலையின் அரசியல் என்ட்ரி: ஒரு பார்வை
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை ஆகஸ்ட் 2020இல் பாஜகவில் சேர்ந்தார்.
கட்சியில் சேர்ந்த 10 மாதங்களுக்குள் அவர் மாநிலப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2016ஆம் ஆண்டு முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.
ஆனால் 2019 மக்களவை மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் திமுக அமோக வெற்றி பெற்ற பிறகு, 2023இல் இபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகினார்.
அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உறவுகளை மேலும் சீர்குலைத்தன.
2024ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களாகக் கருதப்பட்ட அண்ணாமலை, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டணிக்காக பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.