சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. அதற்கு விதித்த கெடு நேற்றோடு முடிவுற்ற நிலையில், சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி தமிழகம் முழுவதுமுள்ள அறநிலையத்துறை அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பாஜக அறிவித்திருந்தது. அதன்பேரில் இன்று மாலை 3 மணிக்கு மேல் சென்னையில் அண்ணாமலை தலைமையிலான பேரணி வள்ளுவர் கோட்டம் பகுதியில் துவங்கியது.
தர்ணா போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜக'வினரை காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மகளிரணி தலைவியான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, "சனாதனத்திற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பட்டியலின மக்களை திமுக அரசு ஏன் முதல்வர் பதவியில் அமரவைக்க வில்லை?" என அண்ணாமலை கேள்விகளை எழுப்பினார். பின்னர் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி போராட்டம் கைவிடப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.