சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதிமன்றம்
திறன் மேம்பாட்டு கழக வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. உடல்நிலை காரணமாக நாயுடுவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என் சந்திரபாபு நாயுடுவை, கடந்த செப் 9ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் துறையினர்(சிஐடி) கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை(FIR) 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகும். 2014ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது இந்த ஊழல் நடந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன்
மேலும், இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு 1வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசம் மாநிலம் முழுவதும் சீமென்ஸ் செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் கிளஸ்டர்கள் நிறுவப்படும் போது, 250 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், அந்த நிதி மோசடியின் பின்னணியில் சந்திரபாபு நாயுடுவும் மற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இருப்பதாக சிஐடி தலைவர் என் சஞ்சய் கூறி இருந்தார். இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆந்திர நீதிமன்றம் அவருக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.