பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது. அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக அரசும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் பெங்களூரில் பெய்த கனமழை இதுவாகும். மழையினால் நேற்று எலக்ட்ரானிக் சிட்டி ரோட்டில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித நிகழ்வும் நடந்துள்ளது. இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியுமான (CFO) மோகன்தாஸ் பாய் பெங்களூருவில் போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு பிரச்சனைகளில் கர்நாடக அரசின் "நடவடிக்கையின்மை"யை சாடியுள்ளார்.
MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த நர லோகேஷ்
கர்நாடகாவில் உள்ள குடிமைப் பிரச்சனைகளை கடுமையாக விமர்சிப்பவராக அறியப்படும் பாய், தனது டீவீட்டில், பெங்களூருவில் உள்ள பல MNC நிறுவனங்கள் கடுமையான உள்கட்டமைப்புப் பிரச்சனைகளால், மாநிலத் தலைநகருக்கு வெளியே தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார். கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், பெங்களூருவாசிகள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது என்றார். ட்வீட்டிற்கு உடனடியாக பதிலளித்த ஆந்திராவின் தொழில்துறை அமைச்சர் நர லோகேஷ்,"ஆந்திரப் பிரதேசத்திற்கு அனைத்து MNC நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார். "அங்கு முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடு புதிய, வணிக நட்பு கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்" என்றார்.