Loading...
தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளி அங்கீகார ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
03:21 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அனுமதி சான்றிதழ்கள் வழங்க ரூ.400 கோடிக்கும் மேல் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த அக்டோபர் 26 அன்று அன்பில் மகேஷை கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாதங்கள்

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் காரசார வாதங்கள்

அன்பில் மகேஷ் தரப்பில் சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்கப்படாமல், சாதாரண கைதிகளுக்கு தரப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் அன்பில் மகேஷிற்கு 2 முதல் 4 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது என வாதிடப்பட்டது.

"இரவில் தூங்கும்போது கூட விளக்குகளை அணைக்காமல் துன்புறுத்துகின்றனர்; முறையான மருந்துகளும் வழங்கப்படவில்லை. எனவே வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே செப்டம்பர் மாதம் 8 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியபோதே அனைத்து விவரங்களையும் வழங்கிவிட்டோம். எங்கும் ஓடிவிட மாட்டார் என்பதால் காவல் தேவையில்லை".

எனினும், காவல்துறை தரப்பில்,"லஞ்சப் பணம் எங்குச் சென்றது, பினாமி மற்றும் உறவினர்களின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் 5 நாட்கள் காவல் தேவை" என வாதிடப்பட்டது.

போலீஸ் காவல்

3 நாட்கள் போலீஸ் காவல் பிறப்பிப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், விசாரணை காலத்தில் அவரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்றும், தினமும் அவரது வழக்கறிஞர் அவரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது மற்றும், அவருக்கு உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளைக் காவல்துறை செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT