
அமித்ஷாவின் தமிழக வருகை: பெரிய தலைமை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறதா?
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜகவில் ஒரு முக்கிய தலைமை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று பாஜக மாநில தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
அமித்ஷாவின் இந்த விசிட்டில் மாநில பாஜக மூத்த தலைவர்களுடனான ஒரு முக்கிய சந்திப்பும், அதைத் தொடர்ந்து இரண்டு கோயில்களுக்குச் செல்வதும், மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எஸ். குருமூர்த்தியுடனான சந்திப்பும் நடைபெறும்.
அதேபோல, அவரை இன்று அதிமுக தலைவர்கள் சந்திக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி
கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தலைமை மாற்றம்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக -பா.ஜ.க. கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் இன்று சந்திப்பு நடைபெற உள்ளது.
முன்னதாக கடந்த மாதம் இபிஎஸ் மற்றும் அமித் ஷா இடையேயான திடீர் சந்திப்பிற்குப் பிறகு மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்குதல், மாற்றுதல் அல்லது குறைந்தபட்சம் அவரது அதிகாரங்களைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு இபிஎஸ் கடுமையாக அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் கூறின.
அதன் பின்னர் காட்சிகள் மாறின. அண்ணாமலை மாநிலத் தலைமைப் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். இதனால் மாநில அளவில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல்
BJP மாநில தலைவருக்கான தேர்தல்
மாநில தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் அடிப்பட்ட பெயர்களில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அடங்குவர்.
இவர்களில் தமிழிசை இதற்கு முன்பு இந்தப் பதவியை வகித்துள்ளார்.
இருப்பினும், வேட்புமனுக்களுக்கான சுற்றறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பாஜகவின் தற்போதைய விதிகள், வேட்பாளர்கள் குறைந்தது பத்து வருடங்களாவது அடிப்படை உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதால், நயினார் நாகேந்திரன் (2017 இல் கட்சியில் சேர்ந்தார்) மற்றும் அண்ணாமலை (2021 இல் சேர்ந்தார்) ஆகிய இருவரையும் இந்த தலைவர் பதவிக்கு தகுதி நீக்கம் செய்கின்றன.
இருப்பினும், தேவைப்பட்டால் விதிகளில் திருத்தம் செய்யலாம் என்று கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. அதனால் என்ன மாற்றம் நிகழும் என பலரும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.