மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று மாலை மணிப்பூரில் தரையிறங்கியதில் இருந்து உயர் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஏறக்குறைய ஒரு மாதமாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநரை அவர் சந்தித்தார். அமித் ஷா, அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் மற்றும் கவர்னர் அனுசுயா உகேவுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், மாநிலத்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அவரிடம் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது சந்திப்பு அதிக நேரம் தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களுக்கு மணிப்பூரில் தங்கி, உயர் இராணுவ அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செல்வாக்கு மிக்க சமூகத் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார்.
11 மலை மாவட்டங்களிலும் நேற்று பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை
மேத்தே சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் வசிக்கும் சில மாவட்டங்களுக்கு அமித்ஷா செல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சில மாவட்டங்கள் மியான்மர் எல்லையில் அமைந்துள்ளன. இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையே தான் மே 3 முதல் இனக்கலவரம் நடந்தது வருகிறது. சில சிறிய சம்பவங்களைத் தவிர, 11 மலை மாவட்டங்களிலும் நேற்று பெரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. நேற்று முந்தைய தினம் நடந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர். அதிநவீன ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகள், செரோ மற்றும் சுகுனு பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.