இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா
நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாளை பதவியேற்கிறார். மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு உட்பட பல நாட்டுத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபர் முய்ஸு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் அடிக்கடி இந்தியாவை விமர்சித்ததோடு, மாலத்தீவில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் அனைவரையும் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். அதனால், மாலத்தீவில் இருந்த அனைத்து இந்திய ஆயுதப் படைகளும் அந்த தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டன.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் முய்ஸு
ஆனால், தற்போது பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மாலத்தீவு அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பிற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அதிபர் முய்ஸு, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்வதை பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். "இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம். மாலத்தீவு-இந்தியா உறவுகள் நல்ல திசையில் செல்வது, இந்த பயணத்தின் மூலம் நிரூபிக்கப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பதவியேற்ற சீன சார்பு அதிபரான முய்ஸு, அதிகாரப்பூர்வமாக இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். அவர் டெல்லிக்கு வருவதை முன்னிட்டு, வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே பிரதமர் மோடி மற்றும் முய்ஸு ஆகியோர் அடங்கிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.