5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ்
கடந்த சனிக்கிழமை, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா அருகே 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024 பொது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்கட்சிக்களை இணைக்க காங்கிரஸ் போராடி வரும் நிலையில், கேரளாவில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் கேரள மாநில காங்கிரஸுக்கும் CPM தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்க்கட்சிகள் சேர்ந்து 'INDIA' என்ற பெயரில் ஒரு கூட்டணியை தொடங்கினர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், CPM, திமுக ஆகிய கட்சிகளும் அடங்கும்.
'ஒரு குழந்தைக்கு கூட முதல்வரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை': காங்கிரஸ்
இந்நிலையில், கேரள உள்துறை அமைச்சகம் ஊழல் செய்வதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும் மாநில காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் CPMக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூட முதல்வர் பினராயி விஜயனால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றும் கேரள காங்கிரஸ் கூறியுள்ளது. எனினும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து, இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், CPM அரசாங்கத்தின் மீதான கேரள காங்கிரஸின் இந்த குற்றசாட்டு, 'INDIA' கூட்டணியை ஒன்றாக வைத்திருப்பது எவ்வளவு பெரிய சவால் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.