
கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்
செய்தி முன்னோட்டம்
கேரளா-எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அலுவா அருகே பீகார் மாநிலத்தினை சேர்ந்த தம்பதி தங்கி பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்களது 5 வயது சிறுமி திடீரென கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து அத்தம்பதி அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்குப்பதிவுச்செய்த காவல்துறை காணாமல்போன சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எங்குத்தேடியும் கிடைக்காத அச்சிறுமி, மறுநாள் அலுவா சந்தை-பெரியாறு ஆற்றுப்பகுதியில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
சிறுமியின் உடலிலும் பிறப்பு உறுப்பிலும் காயங்கள் இருந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதன்பின்னர் கழுத்தினை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம், அதிர்ச்சியினை ஏற்படுத்தியதையடுத்து, காவல்துறை அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வுச்செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
கைது
அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்
விசாரணையில் அவன் பெயர் அஸ்பாக் ஆலம் என்பதும், அவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும், அச்சிறுமியின் பெற்றோர் வசிக்கும் அதேக்குடியிருப்பின் முதல் மாடியில் தங்கி வேலை பார்ப்பவன் என்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்கையில் போதையிலிருந்த ஆலம், நேற்று(ஜூலை.,29)குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்த சம்பவத்தில் வேறுசிலருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறை, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சதீசன்,"கேரளாவில் 5 வயது சிறுமிக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்னும் சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள், மதுபானம் தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மது மற்றும் போதைப்பொருட்களை கட்டுக்குள் வைக்க மாநில அரசால் முடியவில்லை என்றும், இதுகுறித்து அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.