'எதிர்க்கட்சிகளின் இலவசங்களை நம்பாதீர்கள்': பிரதமர் மோடி விமர்சனம்
இலவசத்தை வாரி வழங்கும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் ஒரு புதிய சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளின் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை நேரடியாக சாடினார். காங்கிரஸ் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது காங்கிரஸ் அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளே. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் போன்ற பல வாக்குறுதிகளை வழங்கியது.
மத்திய பிரதேசத்தில் பாஜக அறிவித்திருக்கும் வாக்குறுதிகள்
இதுவே கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதையே பிரதமர் மோடி "இலவசங்கள்" என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார். இன்னும் நான்கே மாதங்களில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவும் காங்கிரஸும் போட்டி போட்டு அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், பிரதமர் மோடி கூறிய "இலவசங்களை" பாஜகவும் மத்திய பிரதேசத்தில் அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதியோர்களுக்கு இலவச இந்து யாத்திரை, பெண்களுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித் தொகை மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2,000 உதவி தொகை போன்ற "இலவசங்களை" மத்திய பிரதேசத்தில் பாஜக அறிவித்திருக்கிறது.