ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட கிட்டத்தட்ட 65 பேர் தற்போது தங்கள் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்தனர். அதன்பேரில் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் பணியாற்றிய சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் நலனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையும், பணி நிரந்தரம் செய்யும் பொழுது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை
மேலும் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், பணி நிரந்தரம் செய்யக்கோரி தாங்கள் அளித்த விண்ணப்பங்கள் குறித்து மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்,ஆனால் காலியாகவுள்ள 800ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, தங்களது பணியினை நிரந்தரம் செய்யாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று(ஜூன்.,8)விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 800 காலி ஓட்டுனர்களுக்கான பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஓட்டுனர்களை பணியிடை நீக்கம் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி,வழக்கின் விசாரணையினை ஜூலை 28ம்தேதிக்கு ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.