பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் இன்று(மே.,22)வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஸ்விகி ஊழியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 1ஆண்டாக பல போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி நிர்வாகத்திற்கும், தொழிலாளர்துறைக்கும் கோரிக்கை மனுவினை அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை பேச்சுவார்த்தையும் இதுகுறித்து நடத்தப்படவில்லை,எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வும் காணப்படவில்லை. இதனால் வேறுவழியின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவுச்செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக அறிவித்திருக்கும் ஸ்லாட் முறையினை ரத்துசெய்து,முன்பு வழங்கிய 'டர்ன் ஓவர்'தொகையினை மீண்டும் வழங்கவேண்டும். ஒரு கி.மீ.,தூரத்திற்கு ரூ.10வழங்கவேண்டும். காத்திருப்புத்தொகையினை ஆர்டர் தொகையோடு சேர்க்காமல் தனியாக வழங்கவேண்டும். முறையான காரணமின்றி ஊழியர்களுக்கு அபராதம் விதிக்ககூடாது. ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ.30ம்,பேட்ச்ஆர்டருக்கு ரூ.20ம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.