நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு இன்று(ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், இது போன்ற அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுவது வழக்கமாகும். இந்த கூட்டத்தின் போது, அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் பங்கேற்று, பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள். சில நேரங்களில், பிரதமர் நரேந்திர மோடியும் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பார். நேற்று ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தார்.
எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக ஆதரவு கட்சிகளுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது
ஆனால், பெரும்பாலான தலைவர்கள் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும், புது டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் கலந்துகொள்ள சென்றுவிட்டதால், நேற்று ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் கூட்டிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் சிலருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தான் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக ஆதரவு கட்சிகளுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சூடு பிடிக்கக்கூடும். மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரச்சனைகள் குறித்த கேள்விகளை காங்கிரஸும் மற்ற எதிர்கட்சிகளும் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.