குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல்
வரும் நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 42 தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய், டி சிவா, ஹர்சிம்ரத் கவுர் பாதல், அனுப்ரியா படேல் ஆகியோர் அடங்குவர். இந்த சந்திப்பின் போது, வட இந்தியாவில் அதிகரித்து வரும் மாசுபாடு, மணிப்பூரில் இனக்கலவரம், ரயில் விபத்துகள், அதானி சர்ச்சை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமர்வில் விவாதம் நடத்த வலியுறுத்தினர்.
கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்கள்
கூட்டத்தொடரின் பரிசீலனைக்காக 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. முக்கிய சட்டங்களில் வக்ஃப் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல் மசோதா மற்றும் இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை அடங்கும். கூடுதலாக, 2024-25க்கான மானியங்களுக்கான துணைக் கோரிக்கைகளின் முதல் தொகுதி மற்றும் டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் பணவியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பை அதிகரிக்க முன்மொழியும் பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா எதுவும் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாலும், இந்த அமர்வின் போது அரசாங்கம் அதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.