நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் தெரிவித்திருக்கும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இம்மாதம் 18ஆம் தேதி முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், 17ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழ் மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது." என்று கூறியுள்ளார். செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால், இந்த கூட்டத்தொடரின் போது என்ன விவாதிக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிடாததால் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிடாததால் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த கூட்டத்தொடரின் போது என்ன விவாதிக்கப்பட உள்ளது என்பதை அரசாங்கம் வெளியிடாததால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் அரசாங்கத்தை கிண்டல் செய்துள்ளார். "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வேலை நாட்கள் மட்டுமே உள்ளன. இன்னும் நிகழ்ச்சி நிரல் குறித்து ஒரு வார்த்தை கூட வெளியிடப்படவில்லை. நிகழ்ச்சி நிரல் என்ன என்பது இரண்டு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது! நாம் இன்னும் நம் நாடாளுமன்றத்தை ஜனநாயகம் என்று அழைக்கிறோம்," என்று ஓ பிரையன் ட்விட்டரில் கூறியுள்ளார்.