கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை
செய்தி முன்னோட்டம்
2023 கர்நாடக அமைச்சரவைக்கு பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது என்றும், அவர்கள் அனைவரும் "கோடீஸ்வரர்கள்" என்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின்(ADR) அறிக்கை தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே மிகக்குறைந்த சொத்துக்களையும், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மிக அதிகமான சொத்துக்களையும் வைத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் முதல்வர் சித்தராமையா மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பதவியேற்றனர்.
ஜி பரமேஸ்வரா, எம்பி பாட்டீல், கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ராமலிங்க ரெட்டி மற்றும் BZ ஜமீர் அகமது கான் ஆகியோர் அந்த அமைச்சரவையில் அடங்குவர்.
details
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பகுப்பாய்வு செய்யப்பட்ட 9 அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.229.27 கோடியாகும்.
அதிகபட்சமாக, கனகபுரா தொகுதியைச் சேர்ந்த டி.கே.சிவகுமார் ரூ.1413.80 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளார். குறைந்தபட்சமாக, சித்தபூர் (எஸ்சி) தொகுதியைச் சேர்ந்த பிரியங்க் கார்கே ரூ.16.83 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
3 அமைச்சர்கள்(33%), தாங்கள் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதே சமயம், 6 அமைச்சர்கள்(67%) , தாங்கள் பட்டதாரிகள் என்று அறிவித்துள்ளனர்.
5 அமைச்சர்கள்(56%) 41 முதல் 60 வயதுடையவர்களாகவும், 4 அமைச்சர்கள்(44%) 61 முதல் 80 வயதுடையவர்களாகவும் இருக்கின்றனர்.
கர்நாடாக சட்டப்பேரவைக்கு புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கும் எதிராக கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.