தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை
பிபர்ஜோய் புயல் "மிக தீவிர புயலாக"வலுவடைந்துள்ளது. மேலும், இந்த புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு இடையே வியாழக்கிழமை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர் மற்றும் தேவ்பூமி துவாரகா ஆகிய மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படலாம். மேலும் ஜூன் 13-15ஆம் தேதி வரை பலத்த காற்றுடன்(மணிக்கு 150 கிமீ வேகம்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது." என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குட்ச் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர்.
மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அவசரச் சூழலையும் சமாளிக்க கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்றார். குஜராத்தின் வல்சாத் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான தித்தால் கடற்கரை, அதிக அலைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அரபிக்கடலில் வீசிய பிபர்ஜாய் புயல் காரணமாக நேற்று மாலை மும்பையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டன. மேலும், பல விமானங்கள் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.