பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!
விமானப் பயணங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், பாலின ரீதியிலான இருக்கை வசதியை வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். பெரும்பாலான விமானங்களில் தொடர்ந்து மூன்று இருக்கைகளைக் கொண்ட அமைப்பே பயன்பாட்டில் இருக்கிறது. தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு நடு இருக்கை கிடைத்து, அவர்களது இரு பக்கவாட்டு இருக்கைகளிலும், ஆண் பயணிகளுடன் பயணிக்க நேர்ந்தால், பயணத்தில் அசௌகரியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதனைத் தவிர்க்க, தனியாக விமானப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு நடு இருக்கையைத் தவிர்த்து இரு பக்கவாட்டு இருக்கைகளை வழங்குவதை தங்களுடைய விமான ஊழியர்கள் உறுதி செய்வார்கள் எனத் தெரிவித்திருக்கிறது ஏர் இந்தியா.
ஊழியர்கள் அதிருப்தி:
ஏர் இந்தியாவின் இந்த முடிவினால் சில ஊழியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு விமானப் பயணத்தில் 10% பெண் பயணிகள் தனியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் புதிய அறிவிப்பு அவர்களிடையே குழப்பத்தையே ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது போன்ற பாலின ரீதியான இருக்கை ஒதுக்கீட்டு முறையை ஏர் இந்தியா அமல்படுத்துவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதனை கடைசி கட்டமாக ஊழியர்களிடம் அளிக்காமல், முன்பதிவு செய்யும் போதே தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகளுக்கான இருக்கைத் தேர்வை அமல்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அறிவிப்புகள் நிறுவன ஊழியர்களுக்கும் சரி, வாடிக்கையாளர்களும் சரி எந்த வகையிலும் பயன்தராது எனத் தெரிவித்திருக்கின்றனர்.