
அமித்ஷா பேசியது அவரது சொந்த கருத்தாம்; சொல்கிறார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
செய்தி முன்னோட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறிய நிலையில், பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த கூற்றுகளை அதிமுக நிராகரித்துள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.
இது பொதுவான சந்திப்புதான் என அதிமுக கூறியிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார்.
டெல்லி சென்று வந்த பிறகு, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனால் கூட்டணி உறுதியாகி வருவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது.
அதிமுக
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 28) இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், 2026இல் தமிழகத்தில் திமுக அரசை அகற்றிவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பேசியிருந்தார்.
அமித்ஷாவின் கருத்து ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து விளக்கமளித்த கே.பி.முனுசாமி, அமித்ஷா பேசியது அவரது சொந்தக் கருத்துக்கள் என்றும், அதிமுகவின் நிலைப்பாடு அல்ல என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்தின் நலன்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்தி, அரசியல் கூட்டணி குறித்த தகவல்களை நிராகரித்தார்.
செங்கோட்டையன்
செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பியதாக தகவல்
இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், ரகசியமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருபுறம் பரபரப்பாக கருத்துக்களை கூறி வரும் நிலையில், அதிமுக வட்டாரங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.