எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு போட்டியாக கூடும் பாஜக ஆதரவு கட்சிகள்
டெல்லியில் இன்று(ஜூலை 18) நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(NDA) கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா நேற்று தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாஜக ஆதரவு கட்சிகளின் குழு தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) என்று அழைக்கப்படுகிறது. அதே போல், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் குழு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(UPA) என்று அழைக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கான பேச்சு வார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஆளும் திமுக கட்சியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.
இதற்கு முன்பு பீகாரில் நடந்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம்
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் விதமாக கடந்த மாதம் 23ஆம் தேதி பீகாரில் வைத்து ஒரு மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 17 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்,நேற்றும் இன்றும் மீண்டும் எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடி இருக்கின்றன. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளகின்றன. இதற்கு போட்டியாக, ஆளும் பாஜகவின் ஆதரவு கட்சிகளும் இன்று கூட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
"NDA அதிகாரத்திற்காக கூடவில்லை. சேவைக்காக கூடுகிறது": ஜேபி நட்டா
26 எதிர்க்கட்சிகள் கூடி இருக்கும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் 38 கட்சிகள் கூட இருப்பதாக அறிவித்து பாஜக தனக்கு இருக்கும் பலத்தை பறைசாற்ற விரும்புவதாக தெரிகிறது. பாஜக தலைமையிலான, NDA கூட்டணியின் வளர்ச்சி குறித்து பேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா, "NDA கூட்டணி, அதிகாரத்துக்காக கூடவில்லை. இந்த கூட்டணி, சேவைக்காக, இந்தியாவை பலப்படுத்துவதற்காக கூடுகிறது" என்று கூறினார். மேலும், எதிர்க்கட்சிகள் குறித்து பேசிய நட்டா, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் கொள்கையோ, முடிவெடுக்கும் அதிகாரமோ இல்லை. ஊழலும் மோசடிகளும் மட்டுமே நிறைந்ததிருக்கிறது என்றும் தெரிவித்தார். பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மெகா கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம்
காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பெரும் கட்சிகள் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுக்குள் இன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை முறையான பேச்சுவார்த்தை நடைபெறும். சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், NCPயை சேர்ந்த சரத் பவார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
டெல்லியில் நடைபெற இருக்கும் பாஜக ஆதரவு கட்சிகள் கூட்டம்
இதற்கிடையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று(ஜூலை-18) புது டெல்லியில் ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் 38 கட்சிகள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான NCP பிரிவு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி(ராம்-விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் போன்ற சில புதிய கூட்டணி கட்சிகள் NDA கூட்டத்தில் பங்கேற்கலாம். தென்னிந்தியாவில் பாஜகவுக்கு அதிகமாக ஆதரவு இல்லை என்பதால், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், கேரள காங்கிரஸ்(தாமஸ்), பாரத் தர்ம ஜன சேனா(பிடிஜேஎஸ்) போன்ற தென்னிந்திய கட்சிகளுடனான உறவுகளை இந்த கூட்டத்தின் மூலம் பாஜக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் மோடியும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.