கடைகளின் சைன்போர்டுகளில் கன்னடா கட்டாயம்: கலவர பூமியான பெங்களூர் வீதிகள்
கர்நாடகாவின் பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில், கன்னட ஆதரவு குழுக்கள் வன்முறைப் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, மொழி மோதல் அதிகரித்துள்ளது. இந்த போராட்டத்தில், மஞ்சள் துண்டு அணிந்த பலர் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள கடைகளின் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. சில இடங்களில் கன்னட குழுக்கள் அவர்களே பெயர் பலகை வைக்க முயன்ற போது, காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது. பெங்களூர் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில், குறைந்தது 60% கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற உள்ளாட்சி அமைப்பின் விதியை, உடனடியாக அமல்படுத்த கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னடத்தில் பெயர் பலகை வைக்க, பிப்ரவரி 28 கடைசி நாள்
கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தை பின், பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு இந்த விதியை விதித்திருக்கும் நிலையில், வலதுசாரி குழு மொழியை மேன்மைப்படுத்துவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும், பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னர் தங்கள் பெயர் பலகைகளில் குறைந்தது 60% கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என, ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தலைவர் துஷார் கிரி இரண்டு நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். உத்தரவு பின்பற்றப்படாத பட்சத்தில், வணிக உரிமங்கள் ரத்து உள்ளிட்ட சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம், கர்நாடகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா கூறியதற்கு பின்னர், மீண்டும் மொழி பிரச்சனை கிளம்பியுள்ளது.