மதுரையில் நடக்கவுள்ள அதிமுக மாநாடு - நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
மதுரை மாநகரில் அதிமுக மாநாடு வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்புகள் அண்மையில் வெளியானது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே இன்று(ஜூலை.,16) அதிமுக பொது செயலாளரான எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. காலை 10 மணியளவில் துவங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அவை தலைவரான தமிழ்மகன் உசேன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்குப்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை
இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் நடக்கவுள்ள மாநாடு, அதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும், வரும் 18ம் தேதி பாஜக கூட்டணி கட்சி கூட்டம் டெல்லியில் நடக்கவுள்ள நிலையில், அதில் அதிமுக சார்பில் கலந்துகொள்வது குறித்த விவரங்களும் ஆலோசிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 5ம் தேதி சென்னை மாவட்டத்தில் நடந்த அதிமுக பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.