அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று(ஜூலை.,5)அண்ணாமலை 39ம்பிறந்தநாளினையொட்டி, 39 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியினை, அதிமுக நிர்வாகி-முரளி, அண்ணாமலை தலைமையில் நடத்தி வைத்துள்ளார். இதனையடுத்து விழுப்புரம் புரட்சித்தலைவி பேரவை செயலாளர் பதவியிலிருந்த முரளி நீக்கப்பட்டுள்ளார் என்னும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட கழக கொள்கை-குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினாலும், கழக சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு, கழக ஒழுங்குமுறை குலையும்வண்ணம் நடந்து கொண்டதாலும், கழக கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் திரு.எஸ்.முரளி இன்று(ஜூலை.,6)முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவருடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எந்தவிதத்தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.