ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்
இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, இது 125 நாட்கள் கொண்ட நெடுந்தூர பயணம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். அவரையடுத்து தமிழ்நாட்டினை சேர்ந்த ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குனரான நிகர் சாஜி பேசுகையில், "பயன்பாட்டிற்கு வந்த பின்னர் ஆதித்யா எல்1 உலக அறிவியல் சகோதரத்துவத்திற்கும், இந்தியாவுக்கும் பெரும் சொத்தாக அமையும்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்
அதன்படி இந்திய பிரதமர் மோடி, "இந்தியாவின் முதல் சோலார் மிஷன், ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்னில் செலுத்தப்பட்டதற்கு நமது இஸ்ரோ பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். பிரபஞ்சம் குறித்து சிறந்த புரிதலை வளர்க்கவும், முழு மனிதகுல நலனுக்காகவும் நமது இந்த அறிவியல் சார்ந்த முயற்சிகள் தொடரவேண்டும்" என்று பதிவு செய்துள்ளார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, "வாழ்த்துக்கள் இஸ்ரோ. நமது அருகிலுள்ள நட்சத்திரங்களின் ரகசியங்களை உடைக்க இந்த முயற்சி உறுதியளிக்கிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் வாழ்த்து
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்த வரலாற்று சாதனைக்காக எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களின் தொலைநோக்கு பார்வை, தீவிரமான அர்ப்பணிப்பு, புத்தி கூர்மை உள்ளிட்டவைகளுக்கு எங்களின் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, இஸ்ரோவில் உள்ள அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள், கடினமாக உழைக்கும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக என்றும் இருப்போம் என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங், சோலார் மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.
வாழ்த்து தெரிவித்த எடப்பாடி கே பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ்
மேலும் அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, சூரியனை ஆய்வு செய்ய வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் குறித்த மகிழ்ச்சியினை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். இத்திட்டத்தின் இயக்குனர் திருமதி.நிகர் சாஜிக்கும் அவரது குழுவிற்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார். அவரையாடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய துவங்கிய இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துக்கள். சூரியன் குறித்த உண்மைகளை இந்த உலகிற்கு எடுத்துச்சொல்ல எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி வெற்றியடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்திற்கும் மிக பெரிய பெருமையினை சேர்த்த விஞ்ஞானிகள்
இவர்களை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "ஆதித்யா எல் 1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலும் ஓர் மைல்கல். விண்வெளி துறையில் அடுத்து வரும் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் புதிய உச்சங்களை தொடும் இஸ்ரோவிற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். சந்திரயான் திட்டங்களில் தமிழகத்தினை சேர்ந்தோர் பணியாற்றிய நிலையில், தற்போது இந்த ஆதித்யா எல் 1 திட்டத்திலும் தென்காசியினை சேர்ந்த விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றியுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிக பெரிய பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.