₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
பொன்சி திட்டத்தில் நடந்த ₹100 கோடி மோசடியில், நகைக்கடை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்க இயக்குநரகத்தால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின், பிராண்ட் அம்பாசிடராக பிரகாஷ்ராஜ் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சியை மையமாகக் கொண்டு சென்னை உட்பட பல பகுதிகளில் செயல்பட்டு வந்த நகைக்கடைகளில், பொன்சி திட்டத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் ₹100 கோடி ஏமாற்றியதற்காக, அமலாக்க துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அமலாக்க துறையினர், ₹23.70 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத பணம், 11.60 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் சில ஆவணங்களையும் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாகவே, தற்போது பிரகாஷ்ராஜிற்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.