மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகரில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா இன்று(ஜூலை.,9)நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,"வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது துவங்கவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி தமிழக மகளிர் பயனடையவுள்ளனர். இந்த திட்டத்தினை கண்டு சிலர் எரிச்சல் மற்றும் பொறாமை காரணமாக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். நமது நலத்திட்டங்களை கண்டு விமர்சனம் செய்வோரை, பதில் கேள்விகளை எழுப்ப முடியும்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,"2014ம்ஆண்டு ஆட்சிக்கு வருகையில் பிரதமர் மோடி கொடுத்த ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? கருப்புப்பணத்தினை மீட்டு ஒரு குடும்பத்திற்கு ரூ.15லட்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை ரூ.15கூட வழங்கவில்லை"என்று பேசியுள்ளார்.
நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பயப்பட வேண்டாம் - மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிற்கு பெரும் ஆபத்து வரவுள்ளது. இந்த ஆபத்திலிருந்து நாட்டினை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பயப்படாமல் கொள்கை மற்றும் லட்சியத்தினை மனதில் வைத்து கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் என்னும் பதவியில் தான் இருப்பதை மறந்து மோடி ஏதேதோ பேசி வருவதாக கூறிய தமிழக முதல்வர், யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதனை கொண்டு தான் அனைத்து எதிர்க்கட்சி கூட்டமானது நடந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், ஆண்டுக்கு நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்த மோடி அதனையும் நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.