1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டா விடுவிப்பு
1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள தடா (பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. 81 வயதான துண்டா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) கூட்டத்தை சேர்ந்த தீவிரவாதி. குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் -- இர்பான் மற்றும் ஹமீதுதீன், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 1993ஆம் ஆண்டு, லக்னோ, கான்பூர், ஹைதராபாத், சூரத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட கரீம் துண்டா, தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் ஆவர். இவரை, 2013ஆம் ஆண்டு இந்தியா-நேபாள எல்லையில் கைது செய்தனர்.
அப்துல் கரீம் துண்டா மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்
1993ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று, ரயில் குண்டுவெடித்து, இரண்டு பேர் கொல்லப்பட்டது மற்றும் பலர் காயமடைந்ததற்கு முக்கிய குற்றாவளி இந்த கரீம் என குற்றம் சாட்டப்பட்டது. 1993 ரயில் குண்டுவெடிப்பு வழக்கின் மூளையாக கரீம் துண்டாவை கருதியது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ). அதேபோல, ஜனவரி 22, 1997 அன்று ரோஹ்தக்கில் உள்ள பழைய சப்ஜி மண்டி மற்றும் கிலா சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்தன, எட்டு பேர் காயமடைந்தனர். அதிலும் குற்றம்சாட்டப்பட்டவர் கரீம். எனினும் கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹரியானா நீதிமன்றம், இரட்டை ரோஹ்தக் குண்டுவெடிப்பு வழக்குகளில், போதிய ஆதாரம் இல்லாததால் துண்டாவை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.