ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தாவின் இடைநீக்கம் ரத்து
ராஜ்யசபாவில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்ட 115 நாட்களுக்கு பிறகு, பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக, ஆளும் பாஜகவைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு ராஜ்யசபா எம்பிக்களை அவர்களின் அனுமதியின்றி, டெல்லி அரசு அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசிற்கு வழங்கும் டெல்லி சேவைகள் ஆணையை (இப்போது சட்டம்) ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினர்களாக அவர் முன்மொழிந்தார். இதற்கு எதிராக பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்ம ராவ் தாக்கல் செய்த உரிமை மீறல் தீர்மானத்தின் கீழ் அவர் ஆகஸ்ட் 11 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி
தனது இடைநீக்கத்தை ரத்து செய்தது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ராகவ் சத்தா, "ஆகஸ்ட் 11ஆம் தேதி, நான் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றேன். இப்போது 115 நாட்களுக்குப் பிறகு எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கும் ராஜ்யசபாவின் தலைவரான துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகவ் சத்தாவுடன் சேர்ந்து மற்றொரு ஆம் ஆத்மி எம்பியான சஞ்சய் சிங் ஜூலை 24ஆம் தேதி ராஜ்யசபாவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் அக்டோபர் 4ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.