ஆவடி இரட்டை கொலை வழக்கில் கைதான வட மாநில இளைஞர்; வெளியான அதிர்ச்சி காரணம்
ஆவடி அருகே உள்ள மிட்னமல்லியில் இரு தினங்களுக்கு முன்னர் ஒரு சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டது பரபரப்பானது. இந்த வழக்கில் நேற்று சென்னை காவல்துறையினர் வடமாநில இளைஞர் ஒருவரை கைது செய்தனர். அந்த இளைஞரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. ஆவடி அருகே உள்ள மிட்னமல்லியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். அவரது மனைவி பிரசன்னாதேவி, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இந்த தம்பதியின் மகனும் ஆயுர்வேத மருத்துவர் ஆவர். சம்பவ தினத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிவன் நாயர், பிரசன்னாதேவி இருவரும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
தடயங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்
வீட்டில் கிடைத்த தடயங்கள் உள்ளிட்டவையின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார். கைதான மகேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது: விசாரணையில் மகேஷ் சிவன்நாயரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிவன் நாயரிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரது வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைவதை பிரசன்ன தேவி கண்டித்துள்ளார். இந்த நிலையில், நேற்று தம்பதிகள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மகேஷ், வீட்டிற்குள் மீண்டும் அத்துமீறி நுழைய, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மகேஷ், பிரசன்னா தேவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதனை தடுக்க வந்த சிவன் நாயரையும் மகேஷ் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவ்வாறு ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.