10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?
மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் இன்று(ஆகஸ்ட் 26) மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் சுற்றுலா ரயில் பெட்டிக்குள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை 7 மணிக்குள் தீ அணைக்கப்பட்டதால் ரயிலின் அருகில் இருந்த பிற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில பயணிகள் அனுமதிக்கப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை தயார் செய்ய ரயிலுக்குள் பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. IRCTC இணையதளத்தை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் பார்ட்டி ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யலாம்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் இந்த பெட்டியில் பயணித்தனர்
ஆனால், கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு இதில் அனுமதி கிடையாது. "இன்று அதிகாலை 5.30 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் உத்தரபிரதேசத்தை பக்தர்கள் பயணித்து கொண்டிருந்தனர். அவர்கள் காபி தயாரிக்க கேஸ் அடுப்பைப் பற்ற வைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்தது. தற்போதைய நிலவரப்படி இதுவரை ஒன்பது உடல்களை மீட்டுள்ளனர்." என்று மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா கூறியுள்ளார். இந்த பிரைவேட் பார்ட்டி ரயில் பெட்டியானது ஆகஸ்ட் 17அன்று லக்னோவில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) இந்த பெட்டி சென்னையை வந்ததைடய இருந்த நிலையில், இன்று இந்த மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.