தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழக மீனவர்கள் 17 பேரினை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டினை சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சர்வதேச கடல் எல்லையினை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்ததாக கூறப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தூதரக நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் அவர், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழக மீனவர்களுக்கு அச்சம் மற்றும் நிலையற்ற சூழலை ஏற்படுத்துகிறது. அதேபோல், கடலுக்குள் எல்லை நிர்ணயம் மற்றும் அதற்கான வரையறைகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி தமிழக மீனவ படகுகள் தெரியாமல் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று விடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஏதுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதனையடுத்து, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்னும் தனது முந்தைய கோரிக்கையினையும் வலியுறுத்துவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.