கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு
கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது இவர்களை பின் தொடர்ந்த வெள்ளைநிற கார் ஒன்று திடீரென அச்சிறுமியின் சகோதரனை தள்ளிவிட்டு, சிறுமியை மட்டும் காரில் கடத்தி சென்றனர். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் தாயாருக்கு மொபைல் போனில் அழைப்பு விடுத்த அந்த கடத்தல் கும்பல், ரூ.5 லட்சம் தனது மகளை பத்திரமாக திருப்பியனுப்புவதாக கூறியுள்ளனர். பின்னர் 2வது முறை ஆடியோப்பதிவு அனுப்பிய கடத்தல் கும்பல், சிறுமி ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்று(நவ.,28)காலை ரூ.10 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் என்றும் கூறியதாக தெரிகிறது.
தப்பி சென்ற கடத்தல் கும்பலை தேடி வருகிறது காவல்துறை
இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறைக்கு இதுகுறித்து புகாரளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தங்கள் விசாரணையினை துவங்கினர். இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், சிறுமியை தேடும் பணியினை மேலும் தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் தேடுதல் தீவிரமாக்கப்பட்டதோடு, 5 சிறப்பு தனிப்படைகளும் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், 20 மணிநேரத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்லம் ஆசிரம மைதானம் ஒன்றில் இச்சிறுமி தனியே அமர்ந்துள்ளார். அதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி அங்கு விரைந்த காவல்துறை அந்த சிறுமியை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் அந்த சிறுமியை அங்கு விட்டு சென்றதாக கருதப்படும் நிலையில், அந்த கடத்தல் கும்பலை தேடும் பணி தொடர்ந்து நடைப்பெறுகிறது