51 மணிநேர மீட்பு பணி: பாலசோர் ரயில் விபத்திற்கு பிறகு என்ன நடந்தது
கடந்த வெள்ளிக்கிழமை, மிகப்பெரும் ஒரு ரயில் விபத்து ஒடிசாவின் பாலசோர் அருகே நிகழ்ந்தது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்ததை அடுத்து, 2,300க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் 51 மணிநேரம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்து எதனால் நடந்தது என்பதை ஆராய தொடங்கினார். சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. அதன்பிறகு, அந்த வழியாக வந்த ஹவுரா ரயில், விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மீது மோதியதால் அதுவும் தடம் புரண்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாலசோர் ரயில் பாதை மீண்டும் இயக்கப்பட்டது
70 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தன. ரயில்வேயின் மூத்த பிரிவு பொறியாளர்கள்(SSE) தலா இரண்டு குழுக்களைக் கண்காணித்து வந்தனர். மீட்புப் பணிகள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளத்தை சீரமைப்பதிலும் ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தினர். மறுபுறம், ரயில்வே வாரியத் தலைவர் கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளை மேற்பார்வையிட்டார். சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல(டிஜி) புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் மேற்பார்வையிட்டார். மீட்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், நான்கு கேமராக்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து நேரலை விவரங்களை ஸ்ட்ரீம் செய்தன. இதை ரயில்வே அமைச்சகத்தின் தலைமையகம் 24-மணி நேரமும் கண்காணித்து வந்தது.