தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்பினை நிறைவு செய்த மருத்துவர் தனுஷ்(24), தஞ்சாவூர் அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் விஜய் சுரேஷ் கண்ணா(38), சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய இடையீட்டு சிகிச்சையளிக்கும் நிபுணர் கெளரவ் காந்தி(41) மற்றும் திருச்சி விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியில் காது-மூக்கு-தொண்டை உள்ளிட்டவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரான சதீஷ் குமார்(46) உள்ளிட்ட 4 பேரும் தங்களது பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 4 இளம் மருத்துவர்களும் இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒரு நாளுக்கு குறைந்தது 14 மணிநேரம் பணியில் ஈடுபடுவதால் மன அழுத்தம்
இவர்களது மரணம் மருத்துவத்துறை மத்தியில் பெரும் வேதனையையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய நல்வாழ்வுத்திட்டத்தின் விபத்து-காயம் சிகிச்சை ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் முடநீக்கியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத், "தற்போதுள்ள மருத்துவத்துறையில் மருத்துவர்கள் ஓய்வின்றி பணிபுரிய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு நாளுக்கு குறைந்தது 14 மணிநேரம் அவர்கள் பணியில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் சராசரியாக ஒரு நிமிஷத்துக்கு 90ஆக இருக்கவேண்டிய இதயத்துடிப்பு 150க்குமேல் இருக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவப்பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாகவே இதுபோல் திடீர் மரணம் ஏற்படுகிறது. மருத்துவமனை கட்டாயத்தின் பேரில் மருத்துவர்கள் அதிகநேரம் பணியாற்றுவது ஒரு பக்கம் இருக்க, பணம், புகழ் ஆகியவற்றிற்காக தொடர்ந்து பணிபுரிவது மற்றொரு வகை" என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.