சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவினை சேர்ந்தவர் அய்யனார், மனைவி சோனியா.
இவர்களுக்கு 4 வயதில் ரக்சன் என்னும் மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுவன் ரக்சன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான்.
இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு ரக்சனுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக ரக்சனை கடந்த 6ம் தேதி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
சிறுவன்
சிறுவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் எதுவும் நடக்காது - உறவினர்கள்
அங்கு சிறுவன் ரக்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று(செப்.,9) இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதற்கிடையே மதுரவாயல் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் தான் இந்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கான நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் சிறுவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் எதுவும் நடத்தப்படாது என்று உறவினர்கள் உறுதியாக கூறி வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.