353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. அறப்போர் இயக்கம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவது குறித்த தகவலை வெளியிட்டு, தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த வேல்ராஜ், இந்த மோசடியை ஒப்புக் கொண்டதோடு, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்
இந்த மோசடி குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரித்து வந்த நிலையில், 353 பேராசிரியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும், 224 கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. ஒரே பேராசிரியர் அதிகபட்சமாக 11 கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றிய அதிர்ச்சித் தகவலும் இதில் தெரிய வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட 353 பேராசிரியர்களுக்கும் வாழ்நாள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 224 கல்லூரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.