Page Loader
ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி 
தற்போது மீட்பு பணி தொடங்கப்பட்டு சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Nov 15, 2023
03:58 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தோடா மாவட்டத்தில் உள்ள அசார் பகுதியில் இன்று காலை இச்சம்பவம் நடந்தது. சுமார் 40 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து, பட்டோடே-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் விழுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மீட்பு பணி தொடங்கப்பட்டு சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தோடா மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் நடக்கும் இரண்டாவது சாலை விபத்து இதுவாகும்.

டக்பிக்

காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு 

"தோடாவில் உள்ள அசார் என்ற இடத்தில் பேருந்து விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. விபத்தில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு டிவ் காம் & மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். "காயமடைந்தவர்களின் தேவைக்கேற்ப அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். மேலும் காயமடைந்தவர்களை மாற்ற ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்படும்." என்று ஜிதேந்திர சிங் ட்விட்டரில் கூறியுள்ளார்.