நாடாளுமன்றத்தில் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம், மொத்த எண்ணிக்கை 146 ஆக உயர்வு
நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டதால் மேலும் 3 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்பிக்கள் தீபக் பைஜ், டிகே சுரேஷ் மற்றும் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் ஆகியோர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மக்களவையில் நேற்று இரண்டு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கீழவையிலிருந்து மட்டும் 100 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நிகழ்ந்த நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டு வந்ததால், இந்த வாரம் தொடக்கம் முதல் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை நசுக்குவதாக பாஜக மீது குற்றச்சாட்டு
ராஜ்யசபா தலைவரும், துணைத் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கரை, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்ததை தொடர்ந்து, ஏற்கனவே பாஜகவிற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நீடித்த மோதல் மேலும் வலுவடைந்தது. மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றுவதற்காக, எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்ததை தொடர்ந்து, மூன்று குற்றவியல் சட்ட திருத்த மசோதா குறுகிய நேரமே விவாதிக்கப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை 'அவமானம்' என கண்டித்திருந்தனர். இந்நிலையில், இன்று பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தை நசுக்குவதாக கூறி, இட நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து டெல்லியின் மையப்பகுதியில் உள்ள விஜய் சவுக் வரை பேரணியாக சென்றனர்.