மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மூவர், மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டது வெளியாட்கள் எனக் கூறும் மாணவர்கள், வெளியாட்கள் கல்லூரிக்குள் வர தடை செய்ய வேண்டும் எனவும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கும், இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கும் இடையே சுவர் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். மாணவப் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின், மத்திய கல்வி அமைச்சகத்திடம் இது குறித்து பேசுவதாக, ஐஐடி பிஹெச்யு நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த மாணவி
இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் மாணவி அளித்துள்ள புகாரில், புதன்கிழமை இரவு தனது நண்பருடன் வெளியே சென்று இருந்த பொழுது பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். கர்மன் பாபா கோவில் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், நண்பரிடம் இருந்து மனைவியை பிரித்து தனியாக அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாகவும், 15 நிமிடங்களுக்கு பின் மாணவியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடுவித்ததாகவும் அப்புகாரில் மாணவி தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருவதாகவும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியுள்ளனர்.