தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து - மா.சுப்ரமணியம் டெல்லி செல்ல முடிவு
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து இன்று(மே.,31)சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், 3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து நாளை(ஜூன்.,1) முதல்வரோடு ஆலோசிக்கவுள்ளோம். அதேபோல் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அதற்கான நேரம் கொடுக்கப்பட்டவுடன் டெல்லி செல்ல உள்ளோம். சிறு குறைகளுக்காக கல்லூரி அங்கீகாரத்தினை நீக்குவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு கூறும்படி, குறை உள்ளது என்றால் அதனை தமிழக அரசு நிச்சயம் சரி செய்யும் என்று கூறியுள்ளார்.
இருவிரல் பரிசோதனை குறித்த சர்ச்சை பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், இருவிரல் பரிசோதனை குறித்து தவறான தகவலை தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர் தகவல் அளித்துள்ளார். இந்த உறுப்பினர் மருத்துவரிடம் என்ன பேசினார் என்பதன் ஆடியோ ஆதாரம் உள்ளது. இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை என்று கூறிய அவர், கவர்னர் அவர்களை சந்தித்த பின்னர் நடந்ததாக கூறியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை அவர் அதிகார போதையில் கூறுகிறார். இவர் தொடர்ந்து மிரட்டினால் ஆடியோ ஆதாரம் வெளியிடப்படும். குழந்தைகள் நலனுக்காக ஆடியோ ஆதாரம் வெளியிடப்படாமல் உள்ளது என்று கூறியுளளார். முன்னதாக இந்த மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து தமிழக சுகாதாரத் துறை மருத்துவ கல்லூரிகளில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.