இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது
உத்திரபிரதேசத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில், இரண்டு மாதத்திற்கு முன்னர் மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களாக வாரணாசியைச் சேர்ந்த குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக லங்கா காவல் நிலையப் பொறுப்பாளர் சிவகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். நவம்பர் 1ல் நடைபெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு வெளியில் தனது தோழியுடன் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், மாணவியை பலவந்தமாக மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று வல்லுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவினரா?
இது தொடர்பாக அடுத்த நாள் மாணவி அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, ஆடைகளை கழற்றி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்ததாக தெரிவித்தார். மேலும், கூச்சலிட்டால் கொன்று விடுவதாக மிரட்டியவர்கள், அவரின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு 15 நிமிடத்திற்கு பின்னர் அவரை விடுவித்ததாக, அந்த புகாரில் மாணவி கூறியிருந்தார். மாணவி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து, சக மாணவர்கள் கல்லூரியில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பில் இருப்பதாக கூறி, பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.